Posts Tagged ‘மாலிகாபூர்’

17ம் நூற்றாண்டு அம்மணி அம்மன் மடம் மற்றும் பிஜேபி பிரமுகர் ஆக்கிரமித்த கட்டிடம் இடிப்பு – தொல்லியல் துறையினர் கண்டு கொள்ளவில்லை!

மார்ச் 19, 2023

17ம் நூற்றாண்டு அம்மணி அம்மன் மடம் மற்றும் பிஜேபி பிரமுகர் ஆக்கிரமித்த கட்டிடம் இடிப்பு – தொல்லியல் துறையினர் கண்டு கொள்ளவில்லை!

அம்மணி அம்மன் மடம்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 4 கோபுர நுழைவு வாயில்கள் உள்ளன. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் வடக்குக் கோபுரம்(அம்மணி அம்மன்) பாதி மட்டுமே கட்டப்பட்ட நிலையைக் கண்டு, பக்தர்கள், செல்வந்தர்களின் உதவியை நாடி அந்த கோபுரத்தினைக் கட்டி முடித்தவர் பெண் சித்தரான அம்மணி அம்மாள். 17ம் நூற்றாண்டு இறுதியில் அவர் ஜீவ சமாதி அடைந்தார். இவருடைய ஜீவ சமாதி திருவண்ணாமலை ஈசான்ய லிங்க கோயிலின் எதிரே அமைந்துள்ளது. அம்மணி அம்மாள் கட்டியதால் அம்மணி அம்மன் கோபுரம் என அழைக்கப்பட்டு வரும் வடக்கு கோபுரம் எதிரில் அவர் வாழ்ந்த மடம் உள்ளது. இதில் அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயில் எதிரில் இக்கோவிலுக்கு சொந்தமான அம்மணி அம்மன் மடம் உள்ளது. 17ம் நூற்றாண்டிற்குப் பிறகு, அவ்விடத்தை பலர் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது தெரிகிறது. திருவண்ணாமலை கோவிலைச் சுற்றியுள்ள இடங்கள் பல இவ்வாறுதான் ஆக்கிரமிப்புகளில் உள்ளன, இந்த இடம் ஆக்கிரமிப்பில் சென்றதால், 1978ல் முதன்முதலாக விஸ்வ ஹிந்து பரிஷத் கோர்ட்டுல் வழக்கு தொடர்ந்தது. 2015ல் கே. ஆர். குமார் வழக்கு தொடர்ந்தார். இந்த 37 வருடங்களில் என்னவாயிற்று என்று தெரியவில்லை. பொதுவாக, இங்கு முன்பு பிச்சாண்டி, இப்பொழுது ஏ.வ. வேலு அவர்களின் ஆதிக்கம் தான் உள்ளது. சுற்றியுள்ள படங்கள் ஒவ்வொன்றாக கடை வளாகம், லாட்ஜ் என்று மாறிக் கொண்டிருக்கின்றன.

பிஜேபி பிரமுகர் ஆக்கிரமித்துக் கொண்டது: இந்த அம்மணி அம்மன் மடத்தை திருவண்ணாமலையை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் / ஆன்மிகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு மாநில துணைத் தலைவர் சங்கர் ஆக்கிரமித்து மடத்தின் இடத்தில் மாடி வீடு கட்டியும், மடத்தின் முன்பு கார் நிறுத்தும் ஷெட்டும் அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது[1]. அப்படியென்றால், பிஜேபி கட்சிக்குள் முரண்பாடு உள்ளது தெரிகிறது. அதிகாரம், அந்தஸ்து, பணம் என்று வந்துவிட்டால், அரசியல்வாதி இப்படித்தான் இருப்பான் போலிருக்கிறது. இதன் மதிப்பு சுமார். ரூ.50 கோடி இருக்கும் என்று தெரிகிறது. ரூ.30 கோடி என்று தினகரன் குறிப்பிடுகிறது. கோவிலுக்கு சொந்தமான அந்த மடத்தை அவரிடம் இருந்து மீட்க அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் திருவண்ணாமலை சார்பு நீதிமன்றத்தில் 2015ல் வழக்கு தொடரப்பட்டது[2]. வழக்கினை விசாரித்த திருவண்ணாமலை சார்பு நீதிமன்றம் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான அம்மணி அம்மன் மடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடத்தை இடித்து அகற்ற உத்தரவு பிறப்பித்தது. இப்பொழுது திமுக அரசு இருப்பதனால், அவர்களுக்கு லட்டு தின்கின்ற கதை தான். அதனால், உடனடியாக இடிக்க கிளம்பிவிட்டதில் எந்த வியப்பும் இல்லை.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்: இதையடுத்து நேற்று 18-03-2023 காலை வருவாய்த் துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அங்கு சென்றனர். அவர்கள் அங்சு ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடத்தை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கட்டிடம் பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடிக்கப்பட்டது. அங்கு நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றதால் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக நேற்று 18-03-2023 காலை முதல் மதியம் வரை கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அம்மணி அம்மன் கோபுரத் தெருவிற்குள் யாரும் செல்லாதவாறு போலீசார் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. காலையில் கோவில் பணியாளர்கள் அம்மணி அம்மன் மடத்தில் இருந்த அறைகளை காலி செய்து மூடி ‘சீல்’ வைத்தனர்[3]. ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் கோயிலுக்கு அருகில் உள்ள  மடத்துக்குள் 25க்கும் மேற்பட்ட சமையல் காஸ் சிலிண்டர்கள் இருந்ததால், அவற்றை போலீசார் பாதுகாப்பாக வேறு இடத்துக்கு மாற்றினர்[4]. இவற்றையெல்லாம் யார் வைத்திருந்தனர் என்று தெரிவிக்கப் பட்வில்லை. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன், கோயில் இணை ஆணையர் குமரேசன், ஆர்டிஓ மந்தாகினி மற்றும் நகராட்சி அலுவலர்கள் மேற்பார்வையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

அம்மணி அம்மன் மடம் இடிப்பு: தொடர்ந்து மாலை 4 மணியளவில் திடீரென கோவில் நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் அம்மணி அம்மன் மடமும் இடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது[5]. இது ஆணையில் இல்லை என்றாலும், அவ்வாறு செய்யப் பட்டது[6], ஏதோ உள்நோக்கத்தைக் காட்டுகிறது. இதையடுத்து அந்த முகப்பு பகுதியில் இருந்து பொக்லைன் எந்திரத்தின் மூலம் இடிக்கும் பணி தொடங்கியது[7]. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆன்மிகவாதிகள் இந்து அமைப்பினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்[8]. அதனை தொடர்ந்து இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் அங்கு வந்தனர். அப்போது மடம் பாதி இடிக்கப்பட்டு காணப்பட்டு உள்ளது[9]. இதையடுத்து அவர்கள் இடிக்கப்பட்ட மடத்தின் அருகில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோவில் நிர்வாக அலுவலர்களிடம் இது குறித்து கேட்ட போது அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது[10]. சேகர்பாபுவைப் பொறுத்த வரையில், இதை பெரிய பிரச்சினையாகக் காட்டி, 30 கோடி மதிப்புள்ள கோவில் நிலத்தை மீட்டேன் என்று பிரகடனப் படுத்திக் கொள்வார்.

பொக்லைன் எந்திரங்கள் அகற்றம்: தொடர்ந்து அந்த இடத்திற்கு ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டம் இரவு 7.30 மணி வரை நடைபெற்றது. அதை தொடர்ந்து அங்கிருந்து பொக்லைன் எந்திரங்கள் அகற்றப்பட்டது. இது குறித்து இந்து அமைப்பினர் கூறுகையில், ”கோவிலுக்கு சொந்தமான இடத்தின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது வரவேற்கத்தக்கது. ஆனால் பழமையான மடத்தை அதிகாரிகள் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் இடித்து உள்ளனர். இதனை இடிப்பதற்கான என்ன. காரணம் என்பது குறித்து அதிகாரிகள் எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை. இதனை கண்டித்து அம்மணி அம்மன் கோபுரம் அருகில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் போராட்டம் நடைபெறும் என்றனர். இன்று என்ன நடந்தது என்பதை இனி மேல் தான் கவனிக்க வேண்டும். பழங்கால கட்டிடங்கள் பாதுகாக்கப் படவேண்டும் என்று இந்திய தொல்துறை சட்டங்களே கூறுகின்றன, ஆனால், அத்துறை இதில் கண்டுகொள்ளாமல் இருந்ததும் வியப்பாகத் தான் இருக்கிறது. தொல்லியல் படித்த, படிக்கும், இவ்விவரங்கள் அறிந்த அம்ர்நாத் ராமகிருஷ்ணன், வெங்கடேசன், மற்ற வல்லுனர்களும் இதனைக் கண்டிக்கவில்லை. இதையும் திராவிட மாடல் எனலாம் போலும்!

© வேதபிரகாஷ்

19-03-2023


[1] தினத்தந்தி, அம்மணி அம்மன் மடத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடம் இடித்து அகற்றம் மடமும் இடிக்கப்பட்டதால் இந்து அமைப்பினர் போராட்டம், PreviousNext, தினத்தந்தி, மார்ச் 18, 4:55 pm (Updated: மார்ச் 18, 10:24 pm).

[2] https://www.dailythanthi.com/News/State/ammani-amman-mutt-removal-of-encroaching-buildings-caused-by-police-presence-922383

[3] தினகரன், அண்ணாமலையார் கோயில் இடத்தில் பாஜ மாநில நிர்வாகி ஆக்கிரமித்து கட்டிய அடுக்குமாடி கட்டிடம் இடிப்பு: ரூ.30 கோடி மதிப்பு நிலம் மீட்பு, 2023-03-19@ 00:26:09; https://www.dinakaran.com/news_detail.asp?Nid=848946

[4] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=848946

[5] சமயம்.காம், கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்த பாஜக பிரமுகர்திருவண்ணாமலையில் சுமார் 23800 சதுர அடி நிலம் மீட்பு, Curated by Mohammed Ghowse | Samayam Tamil | Updated: 18 Mar 2023, 12:25 pm

[6] https://tamil.samayam.com/latest-news/vellore/thiruvannamalai-annamalaiyar-occupied-temple-land-retrieval-from-bjp-member/articleshow/98750432.cms

[7] இ.டிவி.பாரத், அண்ணாமலையார் நிலத்தை சுருட்டிய பாஜக பிரமுகர்.. 23,800 சதுர அடி ஆக்கிரமிப்பு அகற்றம்., Published on: 18-03-2023, 13 hours ago / 8.00 pm

[8] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/videos/other-videos/encroachment-removal-in-thiruvannamalai-ammani-amman-madam/tamil-nadu20230318192915328328069

[9] அக்னி முரசு, அம்மணி அம்மாள் வாழ்ந்த மடம் இடிப்பு, March 18, 2023.

[10] https://www.agnimurasu.com/2023/03/demolition-of-the-monastery-where-ammani-ammal-lived.html?amp=1