சபரிமலையும், பெண்களும் – கட்டுப்பாடுகளின் பின்னணி, சமீப உண்மைகளை மறைத்து இக்கால எதிர்ப்பு பிரச்சாரங்கள்!
சபரிமலைக்கு பெண்கள் ஏன் வரக்கூடாது: இந்தியாவில் பெரும்பாலான கோவில்களில், மாதவிலக்கு காலங்களில் பெண்கள் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்ற அறிவிப்பினை பார்க்க முடியும்[1]. ஆனால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் மட்டும் மாதவிலக்கு காலங்களில் மட்டுமல்ல, குழந்தை பெற்றுகொள்ள தகுதியுடைய எந்த பெண்ணும் கோவிலுக்குள் வரக் கூடாது என்று அதன் இணையதளத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். அதாவது, “கடவுள் ஐயப்பன் ஒரு நித்திய பிரம்மாச்சரி. அதனால் 10 வயதில் இருந்து 50 வயதுடைய மற்றும் மாதவிலக்கு நிற்காத பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று கூறப்பட்டிருக்கும், என்று குறிப்பிடும் விகடன், இது கேரள உயர்நீதி மன்ற தீர்ப்ப்பின் மீது ஆதாரமானதாகும், என்பதனை எடுத்துக் காட்டவில்லை. ஆனால், விகடன் தொடர்ந்து, அதையும் மீறி கோவிலுக்குள் பெண்கள் நுழைந்தால், அவர்கள் கோவில் நிர்வாகத்தால், வெளியேற்றப்படுவார்கள். பிரபல கன்னட நடிகை ஜெய்மாலா, தான் 2006-ம் ஆண்டு சபரிமலைக்குள் சென்று கடவுள் ஐயப்பனை தொட்டு வழிபட்ட தகவலை 2010-ம் ஆண்டு கூறி சர்ச்சையில் சிக்கினார். இதனைத் தொடர்ந்து, கேரள தேவசம் போர்டு அவர் மீது வழக்கும் தொடர்ந்தது[2]. இப்பிரச்சினை மற்றும் சினிமா ஷுட்டிங் எடுப்பவர்கள் மற்ற விஐபிக்கள் எப்படி இந்த விதிமுறைகளை மீறியுள்ளார்கள் என்பது, பல நேரங்களில் ஊடகங்களில் செய்திகளாக வெளிவந்துள்ளன[3] என்று தெஹல்கா எடுத்துக் காட்டியுள்ளது.
பரயாறு கோபாலகிருஷ்ணனிடம் கேட்டதனால், அவர் சொன்ன பதிலை பிரச்சினையாக்கும் குழுக்கள்: மாதவிடாய் போக்கு உள்ள பெண்கள், சபரிமலை செல்ல அனுமதியில்லை. குறிப்பாக, 6 வயது சிறுமியர் முதல், 60 வயது பெண்கள் வரை அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு காரணம், பெண்கள் மாதவிடாய் காலத்தில், சபரிமலைக்கு வந்து விடக் கூடாது; அவ்வாறு செல்வது, தீட்டு என, காலம் காலமாக நம்பப்படுவது தான். சபரிமலை அய்யப்பன் கோவிலை கட்டுப்படுத்தும் அமைப்பான, தேவசம் போர்டின் புதிய தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற பரயாறு கோபாலகிருஷ்ணனிடம், ‘சபரிமலைக்கு செல்ல பெண்கள் அனுமதிக்கப்படுவரா?’ என, நிருபர்கள் கேள்வி எழுப்பினர்[4]. பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் எப்போது அனுமதிக்கப்படுவார்கள் என்ற செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த திருவாங்கூர் தேவஸ்தான தலைவர் பிறையார் கோபாலகிருஷ்ணன், “மனிதர்கள் ஆயுதங்களை மறைத்து வைத்துள்ளனரா என்பதை கண்டறிய கருவிகள் வந்துள்ளது போல, பெண்கள் தூய்மையாக தான் இருக்கிறார்களாஎன உறுதி செய்வதற்கான பரிசோதனை செய்யும் கருவி ஏதேனும்கண்டுபிடித்தால்தான் அது சாத்தியம்“, என்றார்[5]. ஊடகக்காரர்கள் கேட்ட கேள்வி, தோரணை விஷமத்தனமானது, அதனால், அவரும் அதற்கேற்ற முறையில் பதில் கூறியுள்ளார். ஆனால், சில இளம்பெண்கள் இதனை விசமத்தனமாக ஒரு பிரச்சினையாக்கினர்.
கேரளா பரசுராமர் க்ஷேத்திரம்: மேற்குக் கடற்கரைப் பகுதி, பெரும்பாலும் பரசுராமர் சம்பந்தப்பட்ட இடங்களாகவே இருக்கின்றன. குறிப்பாக கேரளா, பரசுராமர் க்ஷேத்திரம் என்றே அழைக்கப்படுகிறது. தந்தையின் ஆணையின் படி, பரசுராமர், தனது தாயாரான, ரேணுகா தேவியின் தலையைத் துண்டித்தார் என்று புராணம் கூறுகிறது. பெண்ணைக் கொல்லலாமா, அதிலும் பெற்ற தாயைக் கொல்வது மிகப்பெரிய பாவமில்லையா என்றெல்லாம் கேட்கலாம் ஆனால், “தந்தை சொல் தட்டாத தனயன்” என்ற நிலையில் பரசுராமர் இருந்திருக்கிறார். மேலும், “யந்திர-தந்திர-மந்திர” முறைகளில் பிறழ்ந்த, முறைதவறிய பெண் ஒருத்தி அவ்வாறு தண்டிக்கப் பட்டாள் எனலாம். பிறகு, அத்தலை மற்றும் முண்டம் வழிபாட்டிற்கான சின்னங்களாக, விக்கிரங்களாக மாறின. “மஹிஷாசுர மர்த்தினி” போல! தலை தனியாக மற்றும் தலையில்லாத முண்டம் தனியாக என்று பெண் தெயவத்தின், சக்தியின் வழிபாடு (ரேணுகா தேவி) பற்பல இடங்களில் நடந்து வருவதை கவனிக்கலாம். பரசுராமர் தன்னுடைய தாயின் தலையை வெட்டிக் கொன்றதனால், தலை மற்றும் முண்டம் தனித்தனியாக இருந்து, அவற்றை அவ்வாறே வழிபடும் சின்னங்களாக மக்கள் வைத்துக் கொண்டனர் என்று தெரிகிறது. இவற்றில் இன்னும் பல மேற்குக் கடற்கரைப் பகுதி மலைகளில், காடுகளில் தான் இருக்கின்றன. மேலும் கேரள பகுதி, சக்தி வழிபாடு மிக்க இடமாக இருந்ததினால், சாதாரண மக்கள் போக்குவரத்து அங்கு குறைவாகவே இருந்தது.
சக்தி வழிபாடு, குழந்தை வழிபாடாக மாறியது: சக்தி வழிபாட்டுடன் குழந்தை தெய்வ வழிபாடும் இருப்பது நோக்கத்தக்கது. பொதுவாக, சக்தி வழிபாடு “யந்திர-மந்திர-தந்திரங்களுடன்” இருக்கும் நிலையில், அதன் பிரயோகங்கள் காலத்தில் குறைந்தது போலும். இதனால், பிறகு, ஒரு குழந்தை தெய்வம் அறிமுகப்படுத்தப் பட்டு, சக்தியின் உக்கிரம் தணிக்கப்பட்டது போலும். இதனால், ராஜஸ்தானிலிருந்து, குஜராத், மாஹாராஷ்ட்ரா, கர்நாடகம், கேரளா என்று வரும்போது, நின்றுக் கொண்டிருந்த, குழந்தை வடிவக் கடவுள்,
- ஒருகை இடுப்பில், மற்றொரு கை தூக்கியிருக்கும் நிலை (ராஜஸ்தான், குஜராத்).
- இருகைகளும் இடுப்பில் வைத்திருக்கும் நிலை (மஹாராஷ்ரா – பண்டரிபுரம், கர்நாடகா – உடுப்பி).
- இருகைகளும் கீழே வைத்திருக்கும் நிலை (ஒரிஸ்ஸா – பூரி, தமிழ்நாடு – பழனி).
- இருகால்களும் மடக்கி உட்கார்ந்திருக்கும் நிலை (கேரளா – சபரிமலை).
குருவாயூரப்பன் கூட குழந்தை தெய்வம் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்கள் மற்றும் குழந்தைகளை தெய்வம் என்ற நிலையில் வைத்தால், ஒருவேளை அவர்கள் கடத்தப்பட மாட்டார்கள் என்று அத்தகையை முறையினை ஏற்படுத்தினார்கள் போலும். அவ்வாறே, இடைக்காலத்தில், கிருத்துவ மற்றும் முகமதிய மதங்களின் தாக்குதம், தாக்கம் முதலியவற்றிலிருந்து காக்க, இம்முறை பயன்படுத்தப்பட்டது. பொதுவாக விழா, பண்டிகை, கொண்டாட்டம் என்று இருக்கும் இடங்களில் தாக்குதல்கள் நடத்த முடியாது, அவ்வாறு மீறி தாக்குதல் நடத்தினால், அவர்களை எளிதில் அடையாளம் காணலாம், தடுத்து விடலாம்[6] என்றும் அவ்வாறு அமைத்திருக்கலாம். ஆதிசங்கரர் பௌத்தம், சமணம் முதலிய மதங்களின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த “சண்மதத்தை” ஏற்படுத்தினார். ஆதிசங்கரருடைய காலம் 509-477 BCE அல்லது 788-820 CE என்றுள்ளது. அவர் ஜைன-பௌத்த “யந்திர-மந்திர-தந்திரங்களுடன்” போராடினார் என்றால், 509-477 BCE காலத்தில் தான் ஏற்பட்டிருக்க வேண்டும். 788-820 CE காலத்தில் கேரளாவில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், 17ம் நூற்றாண்டிலிருந்து, போர்ச்சுகீசியர் முதல் முகமதியர்கள் வரை பிரச்சினைகள் ஏற்பட்டன. அப்படியென்றால், அப்பொழுதுதான் ஆதிசங்கரர் தோன்றியிருக்க வேண்டும்.
© வேதபிரகாஷ்
11-12-2015
[1] விகடன், மாதவிலக்கு குறித்து சபரிமலை தேவசம் போர்டுதலைவர் சர்ச்சை கருத்து: பெண்கள் கொதிப்பு!, Posted Date : 10:18 (24/11/2015); Last updated : 10:18 (24/11/2015).
[2] http://www.vikatan.com/news/article.php?aid=55482
[3] பார்வை – சபரிமலை சர்ச்சை – சக்கரியா,தெஹல்கா 15.07.2006 இதழில் வெளியானது. ஆசிரியரின் இசைவுடன் மொழிபெயர்க்கப்பட்டது.தமிழில்: சுகுமாரன்,
http://www.kalachuvadu.com/issue-80/paarvai.htm
[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1393880
[5]தமிழ்.ஒன்.இந்தியா, மாத விலக்கு குறித்து திருவாங்கூர் தேவஸ்தான தலைவர் சர்ச்சை பேச்சு.. பேஸ்புக்கில் கொந்தளிப்பு, Posted by: Anbarasan Vijay Updated: Monday, November 23, 2015, 18:33 [IST].
[6] ஶ்ரீரங்கம் கோவிலில் கருவறை போராட்டம் என்று நுழைந்தவர்கள், நன்றாக அடிவாங்கிக் கொண்டனர் என்பதனை நினைவு கூரலாம். உண்மையில் வெளி மாநிலத்தவர்கள், தங்களுக்கு என்ன பிரச்சினை என்று அறியாமலேயே, அடாவடித் தனம் செய்த அவர்களை நன்றாக மொத்தி அனுப்பி வைத்தார்கள். பிறகு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.