மஹாத்மா காந்தி ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு தேவை, ஆனால், தமிழக-விசுவாசிகளுக்கு வேண்டாம்! (1)
This photo is of an Australian artist who dressed up as Gandhi in 2012 for charity show in Sydney.
காந்தி பிறந்த நாள் அன்று காந்தி தூஷணங்கள்: வழக்கம் போல, அக்டோபர் 2, 2020 மஹாத்மா காந்தி ஜெயந்தி என்றதும், சமூகவலைதளங்களில், காவிகள், இந்து போராளிகள், இந்துத்துவ வாதிகள், கோட்சே பக்தர்கள் என்று கூறிக் கொண்டு, பிரகடனப் படுத்திக் கொண்டு, பலவித வகையறாக்கள், தூஷணத்தை ஆரம்பித்து விட்டன. வழக்கம் போல, பொய்யான, போடோ-ஷாப் செய்த புகைப்படங்களை வைத்து, அத்தகைய வெறுப்புப் பிரச்சாரம் துவங்கியது. “காந்தியின் செக்ஸ் பரிசோதனைகள்,” என்று ஒருவர் ஆரம்பித்தார்[1]. உடனே அதை வைத்துக் கொண்டே, ஒரே கலாட்டா செய்தனர்[2]. “தலைப்பே விஷமத் தனமானது. இதெல்லாம் தெரிந்த விசயங்கள் தான். காந்தியின் அதிகார வெப்சைட்டிலேயே அத்தகைய புத்தகங்கள் உள்ளன, டவுன்லோன் செய்து கொள்ளலாம். அதை தமிழில் போட்டதனால், ஏதோ கண்டு பிடித்து விட்டது போல பிரமிப்பை ஏற்படுத்துவது முட்டாள் தனம். மேலும், மற்ற தலைவர்கள் காந்தி போல இவ்வாறு பதிவு செய்ய தைரியம் உள்ளதா? விவரங்கள் தாராளமாக உள்ளன. ஆகவே, ஒருவரை தூஷிக்க வேண்டும் என்று தலைப்பிட்டு எழுதுவது சரியில்லை!,” இப்படி நான் பதில் பதிவு செய்த போது, அந்த கோஷ்டிகள் என் மீது பாய்ந்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால், எதிரும்-புதிருமாக இருக்கும் கோஷ்டிகள் தான், இவ்விசயத்தில் ஒரே மாதிரி தூஷிக்கின்றன[3]. இவை இந்து-ஆதரவு மற்றும் இந்து-விரோத கும்பல்களாகவும் இருக்கின்றன[4]. இனி, வீ.சண்முகநாதன், முன்னாள் மேகாலயா கவர்னர், ஆர்.எஸ்.எஸ் தலைவர் அவர்களின் கட்டுரையைப் பார்ப்போம்.

இப்போதும் தேவை காந்தி: ஆர்.எஸ்.எஸ் தலைவர் சண்முகநாதன், “இப்போதும் தேவை காந்தி,” என்ற தலைப்பில், இவ்வாறு எழுதியுள்ளார்[5], ‘மஹாத்மா காந்தி’ என்று அன்புடன் அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு, 1915ம் ஆண்டு திரும்பினார். குஜராத்தில், சபர்மதி என்ற இடத்தில் ஆசிரமத்தை நிறுவினார். எளிய இயற்கை வாழ்வை மேற்கொண்டார். மானுடர்களுக்குள் பேதம் இல்லாத வாழ்வை நடைமுறைப்படுத்த முயன்றார். கடுமையான விரதங்கள் மூலம் சுய கட்டுப்பாடுடன் வாழ்ந்தார். பெருந்தன்மையுடனும், பொறுமையுடனும், அர்ப்பணிப்பு மனத்துடனும், தொலைநோக்குப் பார்வையுடனும், கருணையுடனும், அன்புடனும், எளிமையுடனும் மக்களை அணுகினார்.

சத்யாகிரஹம், சம்பாரண் இயக்கம்[6]: ஆர்.எஸ்.எஸ் தலைவர் சண்முகநாதன் தொடர்கிறார், கடந்த, 1917ம் ஆண்டு, பீஹாரில் சம்பராண் மாவட்ட விவசாயிகளின் நிலை, காந்தியின் கவனத்துக்கு வந்தது. அவுரியில் துவங்கிய அறப்போர் – சம்பராண் மாவட்டத்தில், விவசாயிகள் தங்களுக்குத் தேவையான, அரிசி, கோதுமை, பருப்பு போன்ற பயிர்களைப் பயிரிட முடியவில்லை. பிரிட்டிஷ் அரசால் அவுரி முதலான பணப்பயிர்களை பயிரிடக் கட்டாயப் படுத்தப்பட்டனர். இதனால் அவர்களுக்கு தேவையான உணவு கிடைக்கவில்லை; பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. மேலும் அவுரிப் பயிரை மிகக் குறைந்த விலையில் அரசு ஆதரவு பெற்ற பண்ணையாளர்களுக்கு விற்க, விவசாயிகள் நிர்ப்பந்தப்படுத்தப்பட்டனர். விவசாயிகளின் துன்பங்களை பொருட்படுத்தாத காலனி அரசு, அவர்கள் விற்கும் அவுரி மீது மேலும் பல வரிகளை விதித்தது. விவசாயிகள் மனம் உடைந்து காணப்பட்டனர்.இதை அறிந்த உடனே, ராஜேந்திர பிரசாத், பிரஜ் கிஷோர், நாராயண சின்ஹா போன்ற வழக்கறிஞர்களுடன் சம்பராண் சென்ற காந்தி, சம்பராண் போராட்டத்தை, வரி கொடா இயக்கமாக மாற்றி அமைத்தார். சம்பராணில் ஆசிரமம் ஒன்றை நிறுவிய காந்தி, அப்பகுதியில் இருந்த கிராமங்களுக்கு சென்று, மக்களின் குறைகளைக் கேட்டார்.

பஞ்சமும், வரிகொடா இயக்கமும்: ஆர்.எஸ்.எஸ் தலைவர் சண்முகநாதன் தொடர்கிறார், அப்பகுதி மக்களை, அரசுக்கு வரி கொடுக்காமல், தங்கள் எதிர்ப்பை அறவழியில் காட்டுமாறு ஊக்குவித்தார். மேலும் அவ்வூரின் பள்ளிக் கூடங்களையும், மருத்துவமனைகளையும், சுத்தப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டார். இதனால் காந்தி மீது நம்பிக்கை கொண்ட மக்கள், அவர் வழிகாட்டுதலின்படி, வரி கொடுக்க மறுத்தனர். மக்களிடையே கலகத்தைத் துாண்டினார் என்று குற்றம் சாட்டி, காந்தியை சிறையில் அடைத்தது, பிரிட்டீஷ் அரசு. ஆனால், வரி கொடாப் போராட்டம் மேலும் வலுப் பெற்றதால், அவர் விடுவிக்கப்பட்டார். போராட்டக்காரர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட பண்ணையாளர்கள், விவசாயிகளுடன் உடன்படிக்கை செய்து கொண்டனர். அதன்படி, பஞ்ச காலம் முடியும் வரை வரி வசூல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தின் வெற்றியின் போது தான், காந்தி முதன் முதலில், ‘பாபு’ என்று அழைக்கப்பட்டார். சம்பராண் போராட்டத்தில் இருந்த நேர்மையும், துணிவும், எளிமையும் அவரை தேசம் முழுதும் ஒரு புதிய சக்தியாக அறிமுகப்படுத்தியது. இந்தியா முழுதும் ரயிலில், அதுவும் மூன்றாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தார். ஒவ்வொரு ரயில் நிலையத்திலும், மெலிந்த உடலுடன் வெளியே வந்து வாசலில் நிற்பார். கருணை மிக்க கண்கள். ஒரு பாவமும் அரியாத, கள்ளங் கபடமற்ற சிரிப்பு. மக்களை நோக்கிக் கும்பிடுவார்.இந்தத் தோற்றமே இந்தியா முழுதும் பரவியது.

காந்தி ஏழைகளுக்காக வாழ்ந்தார்: ஆர்.எஸ்.எஸ் தலைவர் சண்முகநாதன் தொடர்கிறார், காந்தி, வசதிகளை எல்லாம் துறந்தார். ஏழைகளின் நலனுக்காகவே வாழ்ந்தார். அந்தக் கருத்தே இந்தியாவை, காந்த சக்தி போல் கவர்ந்து இழுத்தது. காந்தியின் போராட்டம், ஒரே சமயம் சத்யாகிரஹமாகவும், சுய சீர்திருத்தமாகவும் அமைந்திருந்தது.காந்தியப் போராட்டங்கள், கோடான கோடி மக்களை ஒரு பொது இடத்துக்கு கொண்டு வந்தது. ஜாதி, மொழி, மதப் பாகுபாடுகள் கொண்ட மக்களிடையே பரஸ்பர புரிதலும், அறிமுகமும், நட்பும் மலர்ந்தது. காந்தி, வேறுபாடுகளைப் போக்கி, அனைவரிடமும் சமரசப் போக்கை ஏற்படுத்தினார். ஓரளவு இளமையில் ஆடம்பர வாழ்க்கை முறையில் வளர்ந்திருந்தாலும், பிரிட்டிஷ் சட்டம் பயின்றிருந்தாலும், அவர் தன்னை, ஏழை மக்களோடு அடையாளப்படுத்திக் கொண்டார்; அவர்களிடம் இரக்கம் கொண்டார். அவர்களைப் போலவே ஆடை அணிந்தார். 1917க்குப் பின், மண் குடிசையில் வாழ்ந்தார். ஒடுக்கப்பட்ட, வறுமையில் வாடும் மக்கள் மீது, காந்தி கருணை காட்டி வந்தார். மிகச் சிறிய பொருட்களை, மிகப்பெரிய அரசியலுக்கு காந்தி பயன்படுத்தினார். சிறிய கைராட்டை மூலம் சுதந்திரம் அடைய முடியும் என்றார். அதில் சுயசார்பு, கூட்டுச் செயல்பாடு, தேசிய எழுச்சி அடங்கியுள்ளது என்று கூறினார்.ரவுலட் சட்டம் மற்றும் ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு எதிராக, ஒத்துழையாமை இயக்கத்தை, 1922ல், காந்தி துவக்கினார். அன்னியத் துணிகளை பகிஷ்கரிக்கும் போராட்டமும் காட்டுத் தீ போல பரவியது. காந்தி நடத்திய இந்தப் போராட்டம், ஆங்கில அரசுக்கு எதிராக மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியது.கடந்த, 1930ல், பிரிட்டிஷ் அரசு, மக்கள் உபயோகிக்கும் உப்புக்கும் வரி விதித்தது. இதை ஏற்க மறுத்த காந்தி, ‘எங்கள் சொந்த பூமியில் விளைந்த பொருளுக்கு அன்னியர் வரி விதிப்பதா…’ என்று கூறி, சத்யாகிரஹ முறையில் எதிர்த்துப் போராட அறைகூவல் விடுத்தார்.

உப்பு சத்யாகிரஹம்: ஆர்.எஸ்.எஸ் தலைவர் சண்முகநாதன் தொடர்கிறார், அதன்படி, 1930 மார்ச், 2ல், ஆமதாபாதிலிருந்து, 300 கி.மீ.,யில் இருந்த தண்டியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டார். 23 நாள் பயணத்திற்குப் பின் தண்டியை வந்தடைந்த அவர், அங்கிருந்த கடல் நீரில் உப்புக் காய்ச்சி, ஆங்கில சட்டத்திற்கு எதிராக வினியோகித்தார். இந்த நிகழ்வு, தமிழகத்தின் வேதாரண்யம் உட்பட, இந்தியா எங்கும் பல இடங்களில் பரவியது; போராட்டம் தீவிரம் அடைந்தது. காந்தி உட்பட பல்லாயிரக்கணக்கான இந்தியர்களை ஆங்கில அரசு கைது செய்து, சிறையில் அடைத்தது. ஆனால், போராட்டம் தீவிரம் அடைவதைக் கண்ட ஆங்கில அரசு, வேறு வழியில்லாமல், காந்தியுடன் பேச்சு நடத்தி, உப்பு வரியை நீக்கியது.கடந்த, 1942 ஆகஸ்ட், 8ல், ஆங்கில அரசுக்கு எதிராக, ‘ஆகஸ்ட் புரட்சி’ என அழைக்கப்படும், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காந்தி அறிவித்தார். ஆங்கில ஆட்சிக்கு எதிராக, நம் தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக அன்னியப் பொருட்கள் புறக்கணிப்பு, உப்பு சத்யாகிரஹம், வரி கொடா இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என, பல போராட்டங்களை அறவழியில் முன்னெடுத்து நடத்தினார். எல்லாப் போராட்டங்களிலும் அஹிம்சை எனும் வன்முறையற்ற மாபெரும் மந்திரத்தைக் கடைப்பிடித்தார்.

சிறையில் பெண்கள்: ஆர்.எஸ்.எஸ் தலைவர் சண்முகநாதன் தொடர்கிறார், காந்தியை நம்பி லட்சக்கணக்கில் எளிய நடுத்தர வர்க்க மக்கள், அலை அலையாக ஆர்த்தெழுந்தனர். லட்சக்கணக்கான பெண்கள் சிறைக்குச் சென்றனர். வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்த பெண்கள், காந்தியின் அழைப்பிற்காக வீதிக்கு வந்து போராடினர். உயர்ந்த ஜாதி உணர்வுடன் வாழ்ந்தவர்கள், தாழ்த்தப்பட்டவர்களின் சேரிகளுக்குச் சென்று வாழ்ந்தனர்; அவர்கள் கழிப்பறைகளைச் சுத்தம் செய்ய முன்வந்தனர்.காந்தியின் மன உறுதியையும், அஹிம்சை பலத்தையும் கண்ட ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில், காந்தியின் இடைவிடாத போராட்டத்தால், 1947 ஆகஸ்ட், 15ல், இந்தியா சுதந்திரம் பெற்றது. நம் நாட்டிற்காக தன் உயிரையும் காணிக்கையாக்கிய காந்தியின் வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்டங்கள், உலக சரித்திரத்தில் எழுதப்பட்ட அழியாச் சுவடுகள்.நம் தமிழகத்து பெருந்தலைவர் காமராஜர், காந்தியத்தைக் கடைப்பிடித்தவர். எளிமையாக, நேர்மையாக, தன்னலமற்ற தியாக உணர்வோடு கடைசி வரை வாழ்ந்தவர். அவர், காந்தி பிறந்த நாளில் கண் மூடினார். காந்தி, காமராஜருக்கு வழிகாட்டிய பெருந்தகை.
© வேதபிரகாஷ்
02-10-2020

[1] பத்ரி சேஷாத்ரி, காந்தியின் செக்ஸ் பரிசோதனைகள், FRIDAY, AUGUST 29, 2008,
[2] http://www.badriseshadri.in/2008/08/blog-post_29.html
[3] விதை.2.விருக்ஷம், காந்தியின் மிரள வைக்கும் செக்ஸ் பரிசோதனைகள்!
August 2, 2014 by V2V Admin.
[4]https://www.vidhai2virutcham.com/2014/08/02/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/
[5] தினமலர், இப்போதும் தேவை காந்தி!, வீ.சண்முகநாதன், Updated : அக் 01, 2020 23:29 | Added : அக் 01, 2020 23:07. https://www.dinamalar.com/news_detail.asp?id=2624829.