சந்தமாமா குழந்தைகள்-சிறுவர் பத்திரிக்கை – தோற்றம், குழந்தைகளுக்கு-சிறுவர்களுக்கு ஆற்றிய சேவை, தொண்டு, LPG தாக்குதல், மறைவு!

1947ல் சந்தமாமாவின் தோற்றம்: அம்புலிமாமா ஜூலை 1947 ஆம் ஆண்டு பி. நாகிரெட்டி, சக்ரபாணி ஆகியோரால் தெலுங்கில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் தமிழ்ப் பதிப்பு ஆகஸ்ட் 1947 ஆம் ஆண்டு வெளிவந்தது. சிறுவர்களுக்கு நல்லொழுக்கம், பண்புகள் ஊட்டி, பாரதத்தின் தொன்மை, சரித்திரம், புராணம் முதலியவற்றையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளுடன் அம்புலிமாமாவின் இதழ்கள் வெளிவந்தன[1]. தெலுங்கு பதிப்பே தமிழ் உட்பட பிற மொழிகளுக்கான மூலப் படைப்பாக இருந்தது. இது கதைகளில் வரும் கதாபாத்திரங்கள், சூழ்நிலைகள், வரைபடங்களில் தெளிவாக வெளிப்படுகின்றது. தமிழ்ப் பதிப்பில் சிறப்புப் படைப்புக்களாக “தமிழகத்து நாட்டுப்புறக்கதை” என்ற ஒரு கதைப்பகுதி அவ்வப்பொழுது வெளியிடப்பட்டது. பிறகு கொஞ்சம்-கொஞ்சமாக மற்ற மொழிகளில் சந்தமாமா பதிப்புகள் வெளி வர ஆரம்பித்தன. பெரியவர்கள், குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் பத்திரிக்கையாக சந்தமாமா இருந்தது. 1940-1970 வரை குழந்தைகள், ஏன் பெரியவர் கூட, இவரது ஓவியங்களால் ஈர்க்கப் பட்டனர்.

14 மொழிகளில் வெளிவந்த சந்தமாமா: கோடவாடிகன்டீ குடும்ப ராவ் (Kodavatiganti Kutumba Rao 1909-1980) என்பவர் தான், எல்லா கதைகளையும் எழுதி வந்தார். பிறகு மொழிபெயர்ப்பாளர்கள் சேர்க்கப் பட்டனர். சந்தமாமா – தெலுங்கு, தமிழ், கன்னடம் (1949), மலையாளம் (1952), மராத்தி (1952), ஒரியா, இந்தி (1949), மராத்தி, குஜராத்தி (1954), பஞ்சாபி, சிந்தி (1956), பெங்காளி (1972), அசாம் (1976), சிங்களம் (1978), சந்தாலி (2004), சமஸ்கிருதம் (1984), ஆங்கிலம், என்று பல மொழிகளில் வெளிவந்தன. அக்காலத்தில் அச்சுகோர்ப்பு, பிழைத் திருத்தல், சரிபார்த்தல் என்றெல்லாம் முடிந்து, முழு இதழாக வெளிவருவதில் உள்ள முறைகளை அறிந்தால், எவ்வளவு கடின உழைப்புகளுடன் அவை வெளி வந்திருக்கும் என்றறியலாம். மோனோ டைப் என்று ஆரம்பித்து ஆப்-செட் வரை அச்சடிப்பு நடந்துள்ளது. இங்கு சந்தாலி மொழி ஒரு வனவாசிகளின் மற்றும் தொன்மையான மொழி என்பது குறிப்பிடத் தக்கது. பொதுவாக எல்லா மொழி இதழ்களும் ஒரே கதைகளைக் கொண்டிருந்தன, மொழிபெயர்ப்புகள் செய்யப் பட்டன. ஓவியர்கள் போல, மொழிபெயர்ப்பாளர்களும் இருந்தனர். பிறகு, மொழிக்கு ஏற்றவாறு, கதைகள், விசயங்கள் மாற்றப் பட்டன. ஆங்கில சந்தமாமா, தனது, தனித்துவத்தை நிலைநிறுத்திக் கொண்டது. இன்றைய தொழிற்நுட்பம் இல்லாத காலத்தில், இவ்வாறு 14 மொழிகளில் இதழ்களை வெளிகொணர்ந்த, சந்தமாமாவின் சேவை அளப்பரியது.

சந்தமாமா இதழ்களின் ஓவியர்கள்: சந்தமாமா அட்டை மற்றும் பின் அட்டை நான்கு வண்னங்களில் ஈர்க்கும் வண்ணம் இருக்கும். கதைகளுக்கு ஏற்றபடி, அவ்வோவியங்கள், பத்திரங்களுக்கு உயிரூட்டும் வகையில் வரையப் பட்டிருக்கும். தவிர, ஒவ்வொரு பக்கத்திலும், ஒரு சித்திரம் இருக்கும். சந்தமாமா இதழ்களுக்கு பல ஓவியர்கள் சித்திரங்கள் வரைந்தனர் –
- எம்.டி.வி. ஆச்சார்யா
- டி. வீரராகவன் (சித்ரா)
- வட்டடி பாப்பைய்யா (வாபா).
- கேசவ ராவ் (கேசவா)
- எம். கோகலே
- கே.சி.சிவசங்கரன் (சங்கர் 1951-2011)
- சக்திதாஸ்
- எம்.கே. பாஷா
- காந்தி ஐய்யா
- பி.மஹேஷ் (மஹே).
இவர்கள் பலமொழிகள், பல மாநிலத்தவர், மதத்தவர், ஜாதியினர் என்று வித்தியாசம் பார்க்காமல் வேலை செய்தனர். இப்படியெல்லாம் “செக்யூலரிஸமாக” இருக்கும் பொழுது, விகிபீடியா போன்றவை, ஜாதீயத்தைத் தூக்கிப் பிடிக்கிறது என்றெல்லாம் இன்றும், பொய்-பிரச்சாரம் செய்து வருகின்றன[2].

சந்தமாமாவுக்கு திட்டமிட்டே மூடுவிழா நடத்தப் பட்டதா?: சந்தமாமா மிகச்சிறப்பாக சேவை செய்து கொண்டிருந்தது. ஆனால், அதற்குப் போட்டியாக, சில இதழ்கள் தோன்றின, மறைந்தன. ஏனெனில், அந்த தரம், பாரம்பரியம், கொள்கை முதலியவை அவற்றில் இல்லை. நவீனத்துவ யுக்திகள் அதனைத் தாக்க ஆரம்பித்தன. “டால்டன் காமிக்ஸ்” என்று சந்தமாமா குழுமமே “காமிக்ஸ்” எல்லாம் வெளியிட்டன. ஆனால், முடியவில்லை. நவீனத்துவம், குழந்தைகளைத் திசைத் திருப்பியது. காமிக்ஸ், டிவி, கேம்ஸ் என்று சென்ற போது, கொஞ்சம்-கொஞ்சமாக படிக்கும் பழக்கமும் மாறியது. LPG கொள்கையில், சந்தமாமா கொலை செய்யப் பட்டு, சமாதி கட்டப் பட்டது எனலாம். குழந்தைகளை-சிறுவர்களை எவ்வாறு “நுகர்வோர்” கூட்டத்தில் கொணர்ந்து, அவர்களை கவாவேண்டும் என்று ஆராய்ச்சிகள் எல்லாம் நடந்தன. அதற்கேற்ற முறையில், கோடிகள் செலவழித்து, ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டன, விளம்பரங்கள் செய்யப் பட்டன. இருக்கும் சேவை மற்றும் உற்பத்தி நிறுவனங்கள்-தொழிற்சாலைகள் வாங்கப் பட்டு, ஒன்றாக்க வேண்டும், ஒரே பிரான்டை (brand / trade mark) உபயோகிக்க வேண்டும். பழைய-இந்திய பிரான்டுகளை ஒழிக்க வேண்டும். வால்ட் டிஸ்னி என்ற அமெரிக்கக் கம்பெனி வாங்கப் போகிறது என்றெல்லாம் செய்திகள் வந்தன[3]. 2007ல் சந்தமாமா அச்சிடும் தொழிற்சாலை மற்ற கட்டிடங்கள் இடங்கள் பச்சமுத்து மற்றும் ஐ.டி.கம்பெனிகளுக்கு விற்கப்பட்டது. 1999ல் சந்தமாமா இந்தியா லிமிடெட் என்ற கம்பெனியும் மும்பையில் ஆரம்பிக்கப் பட்டது[4]. மார்ச் 2013லிருந்து, புதிய கம்பெனியும், சந்தமாமாவை அச்சிடுவதை நிறுத்தி விட்டது. கம்பெனி டைரக்டர்கள் பணம் பட்டுவாடாஅந்நிய முதலீடு மோசடி முதலியவற்றில் ஈடுபட்டடாக செய்திகள் வந்தன[5].

29-09-2020 – சங்கர் 2020ல் காலமானது: சந்தமாமா, அம்புலிமாமா என்று 14 இந்திய மொழிகளில் வெளிவந்த சிறுவர் மாதப் பத்திரிக்கையின் சித்திரக்காரர், சங்கர் என்பவர் 29-09-2020 அன்று காலமானார். சந்திரசேகரன் சிவசங்கரன் ஈரோடிற்கு அருகில் உள்ள காரதொழுவு என்ற கிராமத்தில் பிறந்தார். 1934ல் சென்னைக்கு வந்த இவர், அரசு கலைக்கலூரியில் சேர்ந்து படித்து, தேர்ந்தார். உயர்நிலைப் படிப்பை முடித்தவுடன் அந்த ஆசிரியரின் பேச்சுக்கிணங்க ஆர்ட்ஸ் ஸ்கூலில் படித்தார் சங்கர். கலை மகள் குழுவில் ரூ. 150 மாத சம்பளத்திற்கு பணியாற்ற அவருக்கு அம்புலிமாமாவில் மிக சரியான வாய்ப்பு கிடைத்தது. ரூ. 350 என்ற பெரிய தொகையை மனதில் வைத்துக் கொண்டு, திறமைக்கு கிடைத்த வாய்ப்பிற்காக வாழ்த்து கூறி கலைமகள் நிறுவனம் அனுப்பி வைத்தது. 1951லிருந்து, இவர் சந்தமாமா இதழ்களுக்கு படம் வரைய ஆரம்பித்தார். 1946ல் கலைமகளுக்கும் வரைந்தார். ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் பத்திரிகையில் பணியாற்றினார். விக்ரம் / விக்கிரமன் மற்றும் வேதாளம் தொடர்கதைகளுக்கு, இவர் வரைந்த ஓவியம் பிரசித்திப் பெற்றது. ஓவியர் கே.சி. சிவசங்கரன் என்பதற்கு பதிலாக அம்புலிமாமா சங்கராக நமக்கு முந்தைய தலைமுறையினருக்கு நன்கு பரீட்சையமானவர் இந்த சங்கர். அவருக்கு முன்பே சித்ரா என்பவர் அக்கதைகளுக்கு ஓவியம் வரைந்து கொடுத்துள்ளார். ராமாயணம், மஹாபாரதம், புராணக்கதைகள் மற்ற சரித்திரக் கதைகளுக்கு ஓவியம்/சித்திரம் வரைந்த சங்கர், நூற்றுக் கணக்கான பாத்திரங்களை உயிருடன் பார்ப்பது போன்ற ஓவியங்களை உண்டாக்கினர். அம்புலிமாமா / சந்தமாமா ஓவியர் சரியாகக் கவனிக்கப் படவில்லை என்றே சொல்லலாம்.

சந்தமாமா, ஆரம்ப முதலாளிகள், ஓவியர்கள் மறைந்தது: சந்தமாமா இதழ் மறைந்தது, நிச்சயமாக திட்டமிட்ட வியாபார யுக்தி, வணிக சதி மற்றும் கலாச்சார தாக்குதல் என்று தெரிகிறது. குழந்தைகள் மற்றும் சிறுவர்களை மேனாட்டுக் கலாச்சாரத்திற்கு இழுப்பது, அத்தகைய பண்பாட்டை அவர்களுக்கு அறிமுகப் படுத்துவது, நாகரிகத்தைப் புகுத்துவது போன்ற செயல்பாடுகளில் இது நடந்தேறியுள்ளது. நாகி ரெட்டி, சக்ரபாணி இவர்களுக்குப் பிறகு வந்த சந்ததியர் கலாச்சாரம் காக்கும் வியாபாரத்தை விட லாபம் கிடைக்கும் வணிகமே சிறந்தது என்று முடிவெடித்த நிலையில், சந்தமாமா அச்சு தொழிற்சாலை, நிறுவனம், சின்னம், என்று எல்லாமே LPG திட்டத்தில் MNC கம்பெனிகளுக்கு விற்கப் பட்டு, சாகடிக்கப் பட்டு விட்டது. ஒருவேளை சந்தமாமா என்ற பெயருக்குக் கூட, அவர்களிடம் காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலை இருக்கலாம். இவையெல்லாம் நிச்சயமாக பாரத கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் மற்றும் ஆகரிகங்களுக்கு எதிராக நடக்கும் போர்களே. உணர்ந்து, இந்தியர்கள் என்று, எப்பொழுது, விழித்துக் கொண்டு, போராட எழுவார்களோ தெரியவில்லை.
© வேதபிரகாஷ் 30-09-2020

[1] தமிழ்வாணன் போன்றோர் கூட, சிறுவர் பத்திரிக்கை என்று தான் “கல்கண்டை” ஆரம்பித்து, பிறகு, வேறு திசைக்குத் திரும்பினர்.
[2] “அம்புலிமாமாவின் சாதிய பிரதிபலிப்பு [தொகு] – இந்திய தொன்மவியல் கதைகளில் காணப்படும் சாதிய சமூக அதிகாரப் படிநிலைகளை அதன் கதைகளின் ஊடாகப் பிரதிபலித்து முன்னிறுத்தி நிலைநிறுத்த உதவுகின்றது என்ற குற்றச்சாட்டும் அம்புலிமாமா மீது உண்டு,” இவ்வாறு பதிவு செய்யப் பட்டிருப்பது, விகிபீடியாவின் வக்கிரமான மனப்பாங்கை / போக்கைக் காண்பிக்கிறது. https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE
[3] Walt Disney, the iconic American brand synonymous with kids and fun across the world, is in talks to buy out Chandamama, the well-established household magazine that kids and adults love equally. https://economictimes.indiatimes.com/articleshow/1869114.cms
[4] Chandamama India Limited is a Non-govt company, incorporated on 06 Aug, 1999. It’s a public unlisted company and is classified as’company limited by shares’. Company’s authorized capital stands at Rs 2000.0 lakhs and has 82.832245% paid-up capital which is Rs 1656.64 lakhs. Chandamama India Limited last annual general meet (AGM) happened on 29 Sep, 2012. The company last updated its financials on 31 Mar, 2012 as per Ministry of Corporate Affairs (MCA). Chandamama India Limited is majorly in Manufacturing (Paper & Paper product, Publishing, printing and reproduction of recorded media) business from last 21 years and currently, company operations are active. Company is registered in Mumbai (Maharashtra) Registrar Office. Chandamama India Limited registered address is B-3, LUNIC INDUSTRIES, CROSS ROAD B MIDC, ANDHERI (E) MUMBAI MH 400093.
https://economictimes.indiatimes.com/company/chandamama-india-limited-/U22122MH1999PLC201906
[5] Mumbai-based Geodesic Ltd, which acquired the iconic magazine in 2007, and its three directors are being probed by the Indian authorities for alleged money laundering and other financial irregularities and Switzerland has agreed to provide “administrative assistance” regarding their accounts in Swiss banks, which broadly means sharing of information with India.
The week, Children’s magazine Chandamama’s owners in trouble for illicit funds in Swiss banks, PTI | New Delhi March 11, 2019 12:08 IST